பக்தியே - முக்திக்கு எளிய வழி
ஆதி சங்கர பகவத் பாதர் வழங்கியுள்ள சிவானந்தலஹரி என்ற நூலின் விளக்கத்தை, பகவான் ரமண மகரிஷி, சிவானந்தலஹரித் திரட்டு என்ற 10 பாடல்களைத் திரட்டித் தந்துள்ளார். அதன் மூல வடிவமும் - அவற்றிற்குரிய தமிழ் வடிவமும் நூலில் இடம் பெற்றுள்ளன.
பக்தி நெறியைக் கடைப்பிடிக்க ஒருவன் எடுத்த பிறவி ஒரு தடை இல்லை என்பன போன்ற சிந்தனைகள் உள்ள பாடல்களில் சொல்லியுள்ள கருத்துக்களும், தத்துவங்களும் அருமையாக விளக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்துப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து முக்தி நிலை பெற முயல்வர் என்பதில் ஐயம் இல்லை.
எளிமையான ஒரு பக்திப் பாதையைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் சிவானந்தலஹரி என்ற நூலில் உள்ள 100 பாடல்களில் 10 பாடல்களின் திரட்டு ஒன்றை ரமணர் திரட்டியுள்ளார். அந்தப் பத்துப் பாடல்களும் தமிழ் வடிவத்துடன் நூலில் இடம் பெற்றுள்ளன. இப்பத்துப் பாடல்களின் விளக்கம் நூலில் பாதிப் பகுதியாக அமைந்துள்ளது. அவ்வளவு விரிவாக அவை விளக்கப்பட்டுள்ளன.
மொத்தத்தில் காலத்துக்கேற்ற கருத்துக் கருவூலமாக நூல் அமைந்துள்ளது. பக்தி வழி முக்தி பெற வழிகோலுகிறது. அன்பர்கள் படித்துப் பயன் பெறுவீராக
தமிழ் வடிவமும், விளக்க உரையும் வழங்கியவர்
இராமநாதன் பழனியப்பன்