Vachanamrutam(Tamil)
1935லிருந்து 1939வரை பகவான் ஸ்ரீ ரமணருக்கும் அவரது பக்தர்களுக்குமிடையே ‘Old Hallஇல் நிகழ்ந்த உரையாடல்களைப் பழம்பெரும் பக்தர் முனகாலா வேங்கடராமையா அவர்கள் மிகக் கவனத்துடன் குறிப்பெடுத்தார். அவையே பின்னர் ‘Talks with Sri Ramana Maharshi என்ற ஆங்கில நூலாக உருப்பெற்றது. அந்நூலின் தமிழாக்கமே இது. உண்மையில் இதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு மொழிபெயர்ப்பாக இல்லாமல் மூல நூலாகவே தோன்றினால் அதில் வியப்பில்லை. ஏனெனில் இதைத் தமிழாக்கிய விசுவநாத சுவாமிகள் பகவான் ரமணர் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களையே பெரும்பாலும் தந்திருக்கிறார். ‘Talks அசல் பத்தரை மாற்றுத் தங்கம் என்றார் பகவானது ஆங்கிலேய பக்தர் மேஜர் சாட்விக். ‘வசனாம்ருதம் தேவாம்ருதம் என்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
இந்நூலிலுள்ள விஷயங்கள் மேம்போக்காகப் படித்து, விட்டுவிடக்கூடியவை அல்ல. உண்மையை நாடிச்செல்லும் ஒவ்வொரு சாதகருக்கும் இந்த நூல் பெரும் வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. பகவான் ஸ்ரீ ரமணரின் போதனைகள் பெரும்பாலும் மௌனத்தின் மூலமே நடைபெற்றன என்றாலும், ஆன்மதாகங் கொண்ட பக்தர்களின் ஐயங்களை அவர் சிலகால் தமது திருவாய் மொழிகளால் தெளிவித்ததும் உண்டு. அவற்றில் சிலவனவே இந்நூலில் காணப்பெறுகின்றன.
ஆன்மிக வாழ்வின் எல்லா விதமான அம்சங்களைப் பற்றியும் அவரிடம் வினாக்கள் வினவப்பட்டன. கேட்பவர் ஒவ்வொருவரின் ஆன்மிக நிலைக்கேற்ப மகரிஷி தந்த விடைகள் கேட்டவரின் ஐயங்களை மிக எளிதில் தீர்த்து வைத்தன. பிரச்சினைகளின் சுமை அகன்றதும், அவர்கள் இதயங்களில் அமைதி நிலவியது. மகரிஷியின் ஸாந்நித்யத்தில் அவர்கள் அரிய சீரிய அக அனுபவம் நுகர்ந்தனர்.
இந்நூலைப் படிப்பதையே சாதனையாகக் கைக்கொண்டாலும், அதுவே நம்மை நம்முள் அழைத்துச்சென்று ஆன்ம மூலத்தில் அமர்த்திவிடும். இந்நூலின் ஒவ்வொரு வரியும் ஆழ்ந்து படித்துணர வேண்டியதாகும். வாசகர்கள் இந்நூலைக் கசடறக் கற்று அதற்குத் தக நின்று உய்யுமாறு பகவான் ரமணர் அருளுவாராக!
pp. viii+576