Sri Tripura Rahasyam(Tamil)
Language Tamil.குரு-சிஷ்ய பாரம்பரியமாகப் போதிக்கப்பட்டு வரும் ஞான நூல்களுள் யோக வாசிஷ்டம் என்னும் நூலையடுத்து ஸ்ரீ திரிபுரா ரகசியம் என்ற நூலும் முக்கிய இடத்தை வகிக்கிறது.
குருவாகிய தத்தாத்ரேயர் தன் சிஷ்யரான பரசுராமருடைய தேகாத்ம புத்தியை நீக்கி சகஜ ஞான நிலையை அடையும் வழியைப் படிப்படியாகக் கதைகள் மற்றும் உருவகங்கள் மூலம் விளக்குவதே இந்நூலின் சாராம்சமாகும்.
ஸ்ரீ திரிபுரா ரகசியம் அத்வைத தத்துவத்தை திறம்பட எடுத்துரைக்கும் நூல் என்று பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள் போற்றி வந்திருக்கிறார். இந்நூலிலிருந்து பல மேற்கோள்கள் காட்டி, தம்மை நாடி வந்த பக்தர்களின் ஐயங்களைக் களைந்திருக்கிறார். இச்சிறப்பான நூல் ஆங்கிலத்திலும் இருந்தால் நல்லது என்று ஸ்ரீ பகவான் கருதியதால், திரு. ரமணானந்த சரஸ்வதி (முனகால வேங்கடராமய்யா) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1938-1940 ஆம் ஆண்டுகளில் ஒரு காலாண்டுப் பத்திரிகையில் எழுதப்பெற்றுப் பின்னர் ஆச்ரம வெளியீடாக வந்துள்ளன. ஆன்மிக அன்பர்களால் இப்புத்தகம் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டும் வருகிறது.
சமஸ்கிருத மூலத்திலிருந்து இந்நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழிலும் திரு. வி.ஆர். சுப்ரமண்ய அய்யரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திரிபுரா ரகசியம் ஆதியில் பரமேச்வரனால் மகாவிஷ்ணுவிற்கும் மகாவிஷ்ணுவால் பிரம்மாவிற்கும் உபதேசிக்கப்பட்டது. பின்னர் மகாவிஷ்ணு தத்தாத்ரேயராக அவதரித்து இவ்விரகசியத்தைப் பரசுராமருக்கு அருளினார். ஹரிதாயனர் பரசுராமரை அடைந்து அவரால் உபதேசிக்கப்பட்டார்.
ஹரிதாயன ஸம்ஹிதா என்றும் அழைக்கப்படும் இத்திரிபுரா ரகசியம் 12000 சுலோகங்கள் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மூன்று காண்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. (தேவி மாகாத்மிய காண்டம் 6687 சுலோகங்கள், ஞான காண்டம் 2163 சுலோகங்கள், சரியா காண்டம் தற்போது கிடைக்கவில்லை). இதற்கு வடமொழியில் தாத்பர்ய தீபிகா என்ற வியாக்கியானமும் ஸ்ரீநிவாச பண்டிதரால் சென்ற நூற்றாண்டில் இயற்றப்பட்டுள்ளது.
பக்கங்கள் 356