Sri Arunachala Stuti Panchakam - Natananandar Urai(Tamil)
"ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகம்" எனும் இத்தோத்திர நூன்மாலையை வனைந்தவர் இருபதாம் நூற்றாண்டில் உலகெங்கும் ஒப்புயர்வற்ற ஞான குருவாய் விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளாவர். இத் துதித்திரட்டு அருணாசலமே தமதியலாகப் பெற்ற அம்மஹாத்மாவின் உள்ளத்தில் அவ்வப்போது பக்தி மேலீட்டாற் பொங்கியெழுந்ததாம். பெரும்பாலும் அண்ணாமலயின்கண் உள்ள குகைகளை உறைவிடங்களாய்க் கொண்டு அப்பெருமான் வசித்திருந்த காலங்களில் உதித்ததாம். இது நிகரறுஞ் சிறப்பார்ந்த அருணூலென்பதை, இதன் முன்னுரையில் காணப்படும் அற்புதமான நூல் வரலாற்றால் நன்கு உணரலாம்.
இதன் உரையாசிரியரான சாது ஸ்ரீ நடனானந்தர், பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளை இற்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1918ம் ஆண்டு முதலே ஞானாசிரியராய்க் கொண்டு அவருபதேச வழியில் ஞான சாதன செய்து மனபரிபாகமும் சித்தத் தெளிவும் பெற்றவர். அடக்கத்திற்கும், அமைதியான பேரின்ப வாழ்க்கைக்கும், ஏகாந்தவாசத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். வேதாந்த நூல்களில் இவருக்குள்ள தேர்ச்சி, இவரது உரையில் வேண்டுமிடங்களில் இவர் அநாயாசமாய்க் கையாண்டிருக்கும் மேற்கோள்களின் மூலம் நனி விளங்கும். ஸ்ரீபகவானுக்கும் பக்தர்களுக்குமிடையே பல்வேறு சமயங்களில் நிகழ்ந்த ஸத் சம்பாஷணைகளையெல்லாம் தொகுத்து ஓர் நூலாக்கியவர். அந்நூலே, பிற்காலத்தில் ஸ்ரீ பகவான் திருக்குறிப்பின்படி ‘உபதேச மஞ்சரி’ என்னும் பெயருடன் ஸ்ரீ ரமண நூற்றிரட்டில் இடம் பெற்றுள்ளது.
மற்றும், இவர் பல்லாண்டுகள் ஸ்ரீபகவானுடன் நெருங்கிப் பழகும் பேறு வாய்க்கப் பெற்றமையின் பயனாய், பகவானது இயல், செயல், சொல், நடை முதலிய நற்றிறங்களையெல்லாம் தெற்றென வுணர்ந்து அடியார் மகிழ ‘ஸ்ரீ ரமண தரிசனம்’ என்னும் விசார நூல் வாயிலாக அனுசந்தித்திருக்கிறார்.
இப்பொழுது அன்பர்களின் பாக்கிய வசத்தால் அவர்களது வேண்டுதலை முன்னிட்டு ஸ்ரீ அருணாசல ஸ்துதி பஞ்சகத்திற்குத் தெள்ளியதோருரையை எளிய நடையிலியற்றியுள்ளார். உரையாசிரியரின் நற்றகவுகளைப் புலப்படுத்தற்கு அன்னாரைப் பற்றி மேலே கூறியுள்ள விவரங்களே சாலும்.
அன்பர்கள் இவ்வுரை வாயிலாய் ஸ்ரீ பகவானது அருண் மொழிகளை நன்குணர்ந்து கிருதார்த்தராவராக.
pp. 144