Ramana Mamunivar (Tamil)
வாழ்வின் ரகசியம் தான் என்ன? ஜீவர்களுக்குத் துன்பம் ஏன் ஏற்படுகிறது; அதை நீக்கி நிரந்தர ஆனந்தத்தை அடையும் வழி யாது; என்பது போன்ற கேள்விகள் ஆதிகாலத்திலிருந்தே கேட்கப்பட்டு வருகின்றன. இக்கேள்விகளுக்கு பல பெரியோர்கள் பலவித விளக்கங்களை அருளியுள்ளனர்.
அருணாசலத்தில் (திருவண்ணாமலையில்) 1896 முதல் 1950 வரை மிக எளிமையாகவும், வெளிப்படையான வாழ்வும் வாழ்ந்து வந்த பகவான் ஸ்ரீ ரமணர், இக்கேள்விகளுக்கு மிக எளிய விடையாக தன்னை அறிதலின்றி பின்னை யெதறிகில் என்? தன்னை அறிந்திடில் பின் என்னை உளது அறிய! பின்ன உயிர்களில் அபின்ன விளக்கெனும் அத் தன்னை தன்னில் உணர, மின்னும் தன்னுள் ஆன்மப் பிரகாசம்; அருள்விலாசம்; அகவிநாசம்; இன்ப விகாசம் என்றும் தன்னை அறிய நான் யார் என்ற எளிய தற்சோதனை (விசார மார்க்கம்) முறையையும் அருளியுள்ளார்.
ஸ்ரீ ரமண பகவானது வாழ்வும் வாக்கும் சந்தேக விபரீதங்களுக்கிடமின்றி மிகவும் எளிமையாக விளங்குவதே அவரது தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. அவற்றுள் சிலவற்றை திரு. கி.வா.ஜ அவர்கள் எளிய நடையில் இந்நூலில் எடுத்துரைக்கின்றார்.
சகல உயிர்களிலும் தன்னையே கண்டு, தன்னில் சகல உயிர்களும் விளங்குவதையும் உணர்ந்து, தன்னில் நிலைத்து எங்கும் சமநோக்கம் கொண்ட பகவான் ரமணரது வாழ்வும் வாக்கும், படிப்போர் மனதைக் கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமேதுமில்லை.