Maha Yogam (Tamil)
வடமொழியிலும் ஆங்கிலத்திலும் சீரிய பாண்டித்யம் பெற்ற இந்நூலாசிரியர் கே.லக்ஷ்மண சர்மா, சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ பகவானுடன் நெருங்கிய தொடர்புகொண்டு அதன் பெரும்பகுதியை அவர் சந்நிதியிலேயே கழித்தவர்.
தமிழ்மொழியின் ஆன்மிக இலக்கியத்திற்குப் பெரும் வளம் சேர்க்கும் ஸ்ரீ பகவானது தமிழ் உபநிடதமான உள்ளது நாற்பது" பாடல்கள் உயரியதோர் நடையையும் இலக்கிய நுட்பங்களையும் கொண்டு உள்ள பொருளின்" உண்மையைப் பலகோணங்களில் விளக்கியருளுவதாகும். அதன் ஆழம் தனக்குக் காண்பதற்கரிதாய் உள்ளதென ஸ்ரீ சர்மா கூற, ஸ்ரீ பகவானும் பேரருள் கூர்ந்து தாமே முன்வந்து போதித்தார். அத்தகைய, பெறற்கரிய பெறும்பேறு பெற்றவர் இவர்.
ஸ்ரீ ரமண சித்தாந்தமான ஏகான்ம உண்மை, அதனையறியும் விசாரமார்க்கம் இவற்றைக்குறித்து, தான் ஸ்ரீ பகவானிடம் கற்ற உபதேச விளக்கத்தைச் சற்றும் ஐயம் திரிபற, அகிலமெங்கும் உள்ள ஆன்மிக அன்பர்களும், முக்திசுகம் பெற விழையும் சாதகர்களும் அரும்பயன் அடையும் வண்ணம் இந்நூலில் விவரித்துள்ளார். 1937 முதன்முறையாக ஆங்கிலத்தில் வெளிவந்து பின்னர் பன்முறை மறுபதிப்புக்களைக் கண்ட இந்நூல் 1939 பிரெஞ்சு மொழியிலும் அதன்பின் ஜெர்மன், போர்ச்சுகீஸ் போன்ற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிமாற்றம் கண்ட பெருமையைக் கொண்டது. அகத்தியரின் தமிழ்கூறும் நல்லுலகமும் படித்துப் பயன்பெற்று உய்ய இறையருள் இன்று கூட்டி வைத்துள்ளது.
pp.xv_349